பெங்களூரு அருகே பள்ளி சிறுமிகளுக்கு சாக்லேட் தருவதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட 64 வயது முதியவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் ஆனேக்கல் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்கிற முதியவர், அப்பகுதியில் வசிக்கும் சிறுமிகளைக் குறிவைத்து இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இது குறிப்பாக, பெற்றோர் வேலைக்குச் சென்ற பிறகு பள்ளியில் இருந்து வீடு திரும்பி தனியாக இருக்கும் சிறுமிகளை அவர் சாக்லேட் வாங்கித் தருவதாகக் கூறி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பாதிக்கப்பட்ட இரண்டாம் வகுப்பு சிறுமி ஒருவர் தனது பெற்றோரிடம் அழுதுகொண்டே நடந்தவற்றைக் கூறியதை அடுத்து இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.

இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஆனேக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து முதியவர் கிருஷ்ணமூர்த்தியைக் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட தொடர் விசாரணையில், இதேபோன்று மேலும் இரண்டு சிறுமிகளுக்கு அவர் சாக்லேட் தருவதாகக் கூறி பாலியல் தொல்லை கொடுத்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் குற்றஞ்சாட்டப்பட்ட முதியவர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், முழுமையான விசாரணைக்குப் பிறகு அவர் நீதிமன்றக் காவலில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பையும் பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.