குஜராத் மாநிலத்தில் பதிவுத் திருமணம் செய்வதற்குப் பெற்றோரின் சம்மதத்தைக் கட்டாயமாக்கும் வகையில், 2006-ஆம் ஆண்டு திருமணப் பதிவுச் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டு வர அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. காதலிப்பதாகக் கூறி பெண்கள் ஏமாற்றப்படுவதைத் தடுக்கவும், குறிப்பாக லவ் போன்ற விவகாரங்களில் இருந்து பெண்களைப் பாதுகாக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அம்மாநில துணை முதல்வர் ஹர்ஷ் சங்கவி சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
இதன்படி, இனி திருமணம் செய்துகொள்ள விரும்பும் ஜோடிகள், தங்கள் திருமணத் தகவல் பெற்றோருக்குத் தெரிவிக்கப்பட்டுவிட்டதா என்பதற்கான உறுதிமொழிப் பத்திரத்தை சமர்ப்பிக்க வேண்டும். மேலும், பெற்றோரின் ஆதார் அட்டை மற்றும் முகவரி சான்றுகளையும் பதிவேற்றம் செய்ய வேண்டியது அவசியமாகும்.
இந்த புதிய விதிகளின்படி, விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட 10 நாட்களுக்குள் உதவிப் பதிவாளர் தரப்பிலிருந்து மணமக்களின் பெற்றோருக்குத் தொலைபேசி அல்லது நேரடித் தகவல் அனுப்பப்படும். பெற்றோரின் ஒப்புதல் அல்லது தகவல் உறுதி செய்யப்பட்ட பின்னரே, 30 நாட்கள் காத்திருப்பு காலத்திற்குப் பிறகு திருமணச் சான்றிதழ் வழங்கப்படும்.
இதனால் சமூகத்தினர் விடுத்த நீண்டகால கோரிக்கையை ஏற்று இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளதாக அரசு கூறினாலும், இது தனிமனித சுதந்திரத்தைப் பாதிப்பதாக எதிர்க்கட்சிகளும் சமூக ஆர்வலர்களும் கவலை தெரிவித்துள்ளனர். தற்போதைய நிலையில், இந்த சட்டத் திருத்தம் குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
