சாதாரண ஒரு வெள்ளை சட்டையின் விலை எவ்வளவு இருக்கும்? சில நூறுகளில் தொடங்கி சில ஆயிரங்கள் வரை இருக்கலாம். ஆனால், பிரபல ஆடை வடிவமைப்பு நிறுவனமான “வெடெமென்ட்ஸ்” அறிமுகப்படுத்தியுள்ள ஒரு புதிய வெள்ளை சட்டையின் விலை சுமார் ஒரு லட்சம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது இணையத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
இந்நிலையில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இந்த நிறுவனம், தையல் வேலைப்பாடுகள் ஏதுமின்றி, மிகவும் எளிமையான தோற்றத்தில் இருக்கும் இந்த சட்டையை இவ்வளவு அதிக விலைக்கு விற்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. “இது வெறும் வெள்ளை சட்டை தானே, இதில் என்ன அவ்வளவு சிறப்பு?” என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கிண்டலாகக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த சட்டையின் விலை இவ்வளவு அதிகமாக இருப்பதற்கு அதன் ‘பிராண்ட் மதிப்பு’ மற்றும் அது தயாரிக்கப்பட்ட தரம் மட்டுமே காரணம் என கூறப்படுகிறது. ஆடம்பர ஆடை சந்தையில் இத்தகைய விசித்திரமான விலையேற்றம் ஒன்றும் புதிதல்ல என்றாலும், நடுத்தர மக்களைப் பொறுத்தவரை இது எட்டாக்கனியாகவே உள்ளது.
மேலும் “இது எல்லாம் ஒரு டிசைனா?” என மக்கள் கலாய்த்தாலும், பிரபலங்களும் செல்வந்தர்களும் இத்தகைய ஆடம்பர பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். பாப் கலாச்சாரம் மற்றும் நவீன பேஷன் உலகில் தனித்துவத்தைக் காட்ட விரும்புபவர்களுக்காகவே இத்தகைய விலையுயர்ந்த ஆடைகள் சந்தைப்படுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
