ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் பகுதியில், திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த இரண்டு சகோதரிகள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழப்பு குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்காமல், விடிய விடிய உடல்களுடன் அமர்ந்து குடும்பத்தினர் ‘தாந்த்ரீக’ சடங்குகள் செய்ததாக எழுந்துள்ள புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட குடும்பத்தில் விரைவில் திருமணம் நடக்கவிருந்த நிலையில், அன்று இரவு மெஹந்தி விழா மற்றும் பாடல், நடனத்துடன் கொண்டாட்டங்கள் களைகட்டியிருந்தன. ஆனால், அதிகாலை 3 மணியளவில் அந்த இரண்டு சகோதரிகளும் திடீரென உயிரிழந்ததாகத் தகவல் வெளியானது. அதிர்ச்சியூட்டும் விதமாக, மரணம் குறித்து உடனடியாக போலீஸாருக்குத் தெரிவிக்காமல், காலை 5 மணி வரை குடும்பத்தினர் உடல்களை வீட்டிலேயே வைத்திருந்துள்ளனர்.

இறந்த சிறுமிகளின் தாயார் மற்றும் தாய்மாமன் ஆகியோர் இந்த மரணத்தில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளனர். “மகள்களின் உடல்நிலை மோசமடைந்தபோது அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்குப் பதிலாக, இரவு முழுவதும் தாந்த்ரீகர்களிடம் (மந்திரவாதிகள்) அழைத்துச் சென்று சடங்குகள் செய்தனர்” எனத் தாய் பரபரப்பு புகாரை முன்வைத்துள்ளார்.

அந்தப் பெண்களுக்கு முன்பு நிச்சயிக்கப்பட்ட திருமணம் திடீரென நிறுத்தப்பட்டு, வேறு இடத்தில் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டதும், அதனால் அவர்கள் மன உளைச்சலில் இருந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.  இறந்த சகோதரிகளின் சமூக ஊடகக் கணக்குகள்  திடீரென முடக்கப்பட்டு, அதிலுள்ள தகவல்கள் அழிக்கப்பட்டுள்ளதாகக் குடும்பத்தினர் கவலை தெரிவித்துள்ளனர். தந்தை, சகோதரர் மற்றும் உறவினர்களின் செல்போன் தரவுகளை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உடல்கள் தற்போது மகாத்மா காந்தி மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளன. இது பற்றி போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது கூட்டுத் தற்கொலையா அல்லது திட்டமிட்ட கொலையா? இரவு முழுவதும் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்காமல் மறைத்தது ஏன்? தாந்த்ரீகச் சடங்குகளுக்கும் இந்த மரணத்திற்கும் தொடர்பு உள்ளதா? என்ற கோணங்களில் தடய அறிவியல் நிபுணர்களின் உதவியுடன் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.