உத்தரப் பிரதேச மாநிலம் பாண்டா மாவட்டத்தில் 33 சிறுவர்களைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் நீர்ப்பாசனத் துறை இளநிலைப் பொறியாளர் ராம்பவன் மற்றும் அவரது மனைவி துர்காவதி ஆகிய இருவருக்கும் போக்சோ நீதிமன்றம் மரண தண்டனை விதித்து அதிரடித் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2010ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை பாண்டா மற்றும் சித்ரகூட் ஆகிய பகுதிகளில் இந்தத் தம்பதியினர் சிறுவர்களை ஆபாசப் படமெடுத்தல் மற்றும் பாலியல் ரீதியாகத் துன்புறுத்துதல் போன்ற கொடூரமான செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். ஆன்லைன் விளையாட்டுகள் மற்றும் பணத்தைக் காட்டி ஆசைவார்த்தை கூறி மூன்று வயது முதல் சிறுவர்களைத் தங்கள் வலைக்குள் வீழ்த்திய இவர்களின் செயல் சமூகத்தையே உலுக்கியுள்ளது.
இது குறித்து சிபிஐ நடத்திய தீவிர விசாரணையில் பல சிறுவர்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தகவல் வெளிச்சத்திற்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இது அறிதுவகைக்கும் அரிதான வழக்கு என்று குறிப்பிட்டு குற்றவாளிகளுக்குத் தூக்குத் தண்டனை விதித்ததுடன் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு சிறுவனுக்கும் தலா பத்து லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
மேலும் குற்றவாளிகளின் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட பணத்தையும் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்குச் சமமாகப் பிரித்து வழங்க நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. இத்தகைய கொடூரமான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் திருந்துவதற்கு வாய்ப்பே இல்லை என்றும் நீதி வழங்க இத்தகைய கடுமையான தண்டனை அவசியமானது என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
ஐந்தாண்டுகால சட்டப் போராட்டத்திற்குப் பிறகு சிறுவர்களுக்குக் கிடைத்துள்ள இந்த நீதி நாடு முழுவதும் பாராட்டைப் பெற்றுள்ளதுடன் குழந்தைகளுக்கெதிரான குற்றங்களுக்கு இது ஒரு பாடமாக அமையும் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
