மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் உள்ள கெப்பி மாநிலத்தில், லகுராவா என்ற பயங்கரவாத அமைப்பினர் நடத்திய கொடூரத் தாக்குதலில் 33 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். கடந்த புதன்கிழமை அன்று ஏழு கிராமங்களை ஒரே நேரத்தில் குறிவைத்து புகுந்த இந்தத் தீவிரவாதிகள், அங்கிருந்த வீடுகள் மற்றும் கடைகளுக்கும் தீ வைத்தனர்.

குறிப்பாக மாமுனு என்ற கிராமத்தில் மட்டும் 16 பேர் உயிரிழந்துள்ளனர். உள்ளூர் மக்களின் கால்நடைகளைத் திருடிச் செல்வதற்காகவே இந்தத் திட்டமிட்ட வன்முறையை அவர்கள் அரங்கேற்றியுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

லகுராவா அமைப்பு ஆரம்பத்தில் தங்களை மக்களின் பாதுகாவலர்களாகவும், கொள்ளையர்களிடமிருந்து காப்பவர்களாகவும் காட்டிக்கொண்டு களமிறங்கியது.

ஆனால், காலப்போக்கில் அவர்களே வன்முறை மற்றும் கொடூரத் தாக்குதல்களில் ஈடுபடத் தொடங்கினர். இதனால் நைஜீரிய அரசு கடந்த ஆண்டு இந்த அமைப்பை பயங்கரவாத இயக்கமாக அறிவித்தது.

தற்போது இந்தத் தாக்குதலால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருவதால், அமைதியை நிலைநாட்ட கூடுதல் ராணுவப் படைகள் அங்கு குவிக்கப்பட்டுள்ளன.