தமிழக அரசு அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்ற கோரிக்கையை முதலில் முன்வைத்த சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம், தற்போது தனது நிலைப்பாட்டை மென்மையாக மாற்றிக்கொண்டுள்ளார்.

ஒரு காலத்தில் “ஆந்திரா மாடல்” போல அமைச்சரவையில் இடம் வேண்டும் என்று உறுதியாகப் பேசியவர், திமுக தலைமை இதற்கு உடன்படாததைக் கண்டு, இப்போது “தேர்தல் வெற்றிக்கு பிறகு பார்த்துக் கொள்ளலாம்” எனப் பதிலளித்துள்ளார்.

கூட்டணியில் பிளவு ஏற்பட்டுவிடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கையாலேயே கார்த்தி சிதம்பரம் மற்றும் ப.சிதம்பரம் ஆகியோர் இந்த அதிரடி மாற்றத்தை எடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதே சமயம், மாணிக்கம் தாகூர் மற்றும் ஜோதிமணி போன்ற காங்கிரஸ் நிர்வாகிகள் இன்னும் ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர். அவர்களின் கருத்துகளை கார்த்தி சிதம்பரம் வெளிப்படையாக ஆதரிக்கவோ அல்லது எதிர்க்கவோ செய்யாமல் தவிர்த்து வருகிறார்.

தேர்தலுக்குப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று அவர் கூறியிருப்பது, தற்காலிகமாக அமைதி காப்பதே தவிர, இந்த கோரிக்கையை அவர் முழுமையாகக் கைவிடவில்லை என்பதையே காட்டுவதாக காங்கிரஸ் கட்சியின் மற்றொரு தரப்பினர் கருதுகின்றனர்.