டி20 உலகக் கோப்பையின் சூப்பர்-8 சுற்றில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ள உள்ள நிலையில், தொடக்க வீரர் அபிஷேக் சர்மாவின் ஃபார்ம் குறித்து சமூக வலைதளங்களில் விவாதங்கள் எழுந்துள்ளன.
இந்தத் தொடரில் விளையாடிய மூன்று போட்டிகளிலும் ரன் ஏதும் எடுக்காமல் அவர் ஆட்டமிழந்ததால், அவருக்குப் பதிலாக சஞ்சு சாம்சனை களமிறக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து விளக்கமளித்த இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளர் மோர்னே மோர்க்கல், அபிஷேக் சர்மாவை அணியில் இருந்து நீக்குவது பற்றி எந்த ஆலோசனையும் நடக்கவில்லை என்றும், அவர் ஒரு உலகத்தரம் வாய்ந்த வீரர் என்றும் ஆதரவு தெரிவித்துள்ளார்.
அபிஷேக் சர்மா தற்போது ரன் சேர்க்க திணறினாலும், பயிற்சியில் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், ஒருமுறை அவர் நல்ல தொடக்கத்தைப் பெற்றுவிட்டால் பழையபடி அதிரடி காட்டுவார் என்றும் மோர்க்கல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற அணிகளில் உள்ள ஆஃப் ஸ்பின்னர்களை எதிர்கொள்ள இஷான் கிஷன், திலக் வர்மா போன்ற வீரர்களுடன் இணைந்து அபிஷேக் தீவிரமாகத் தயாராகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மற்ற வீரர்களின் உதவியுடன் இந்தத் தொடரின் முக்கியக் கட்டத்தை வெற்றிகரமாகக் கடப்பார்கள் என்பதே பயிற்சியாளரின் கருத்தாக உள்ளது.
