தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், அரசியல் களம் அதிரடி மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. திமுக, அதிமுக, நாம் தமிழர் மற்றும் தமிழக வெற்றி கழகம் என நான்கு முனைப் போட்டி நிலவும் நிலையில், பிரேமலதா விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக திடீரென திமுக கூட்டணியில் இணைந்துள்ளது.
சமீபத்தில் அதிமுக மற்றும் பாஜக தலைவர்களுடன் நெருக்கம் காட்டிய பிரேமலதா, யாரும் எதிர்பாராத விதமாக அறிவாலயம் சென்று முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேமுதிகவின் இந்த முடிவை அரசியல் விமர்சகர் திருச்சி சூர்யா கடுமையாகச் சாடியுள்ளார். “அழுகிய பழம் நழுவி தேன் கலந்த பாலில் விழுந்தது” என்று குறிப்பிட்டுள்ள அவர், அதிமுக தரப்பில் ராஜ்யசபா சீட் தர மறுத்ததால்தான் தேமுதிக இந்த முடிவை எடுத்ததாகக் கூறியுள்ளார்.
திமுக ஒரு ராஜ்யசபா சீட் மற்றும் 6 சட்டமன்றத் தொகுதிகளை ஒதுக்க ஒப்புக்கொண்டதால் கூட்டணி உறுதியானதாகவும், இதன் மூலம் எல்.கே. சுதீஷ் மாநிலங்களவை உறுப்பினராகும் பிரேமலதாவின் ஆசை நிறைவேறப்போவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
மறுபுறம், யூடியூபர் மாரிதாஸ் போன்றோரும் தேமுதிகவின் இந்த நிலைப்பாட்டை விமரிசித்து வருகின்றனர். ஒவ்வொரு தேர்தலிலும் லாபத்தை மட்டுமே குறிவைத்து பிரேமலதாவும் சுதீஷும் செயல்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஏற்கனவே வலுவாக உள்ள திமுக கூட்டணிக்கு தேமுதிகவின் வருகை கூடுதல் பலமாகப் பார்க்கப்பட்டாலும், எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக வலைதளங்களில் இந்தக் கூட்டணி கடுமையான விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது.
