ரஷ்யாவின் தாகெஸ்தான் பகுதியில் உள்ள ‘சோவ்க்ரா-1’ என்ற சிறிய கிராமம், அங்குள்ள மக்களின் வினோதமான திறமைக்காக உலகம் முழுவதும் அறியப்படுகிறது. இந்த கிராமத்தில் வசிக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கயிற்றின் மேல் நடப்பதில் வல்லவர்கள்.

சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலாகப் பின்பற்றப்படும் இந்தப் பாரம்பரியம், காதலுக்காகத் தொடங்கியது என்று ஒரு கதையுண்டு. மலைகளுக்கு மறுபுறம் உள்ள கிராமத்துப் பெண்களைச் சந்திக்கச் செல்ல பல நாட்கள் ஆனதால், இளைஞர்கள் பள்ளத்தாக்குகளுக்கு இடையே கயிற்றைக் கட்டி அதன் மேல் நடந்து சென்றதாகக் கூறப்படுகிறது.

ஆனால், கடும் குளிரால் பாலங்கள் உடைந்தபோது வாழ்வாதாரத்திற்காகத் தொடங்கிய இந்தப் பழக்கம், காலப்போக்கில் ஒரு கலை வடிவமாக மாறியதே உண்மை என்று மற்றவர்கள் கூறுகின்றனர்.

சோவியத் யூனியன் காலத்தில் இந்த கிராமத்தைச் சேர்ந்த கலைஞர்கள் சர்க்கஸ் துறையில் பெரும் புகழ் பெற்றனர். ஒரு சென்டிமீட்டர் கூட இல்லாத மெல்லிய கயிற்றின் மேல் அசால்ட்டாக நடக்கும் இவர்களின் தைரியம் வியக்கத்தக்கது.

இருப்பினும், தற்போது வறுமை மற்றும் நவீன வேலைவாய்ப்புகள் காரணமாக இளைஞர்கள் நகரங்களுக்குச் செல்வதால் இந்தப் பாரம்பரியம் மெல்ல அழிந்து வருகிறது.

வெறும் 400 பேர் மட்டுமே வசிக்கும் இந்த கிராமத்தில், இன்றும் பள்ளிகளில் குழந்தைகளுக்குக் கயிற்றின் மேல் நடக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. மனிதனின் அசாத்திய துணிச்சலுக்குச் சான்றாக விளங்கும் இந்தக் கிராமம், தனது பழமையைப் பாதுகாக்க இன்றும் போராடி வருகிறது.