விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள நெடுங்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் என்பவர் தனது மனைவியின் வங்கி கணக்கில் இருந்த மகளிர் உரிமைத் தொகையை எடுத்துச் செலவு செய்த விவகாரத்தில் மனவேதனை அடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈஸ்வரனின் மனைவி ராமு என்பவரது வங்கி கணக்கில் தமிழக அரசின் மகளிர் உரிமைத் தொகை மற்றும் கோடைகால சிறப்பு நிதி என மொத்தம் ஐந்தாயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பணத்தை மனைவிக்குத் தெரியாமல் ஈஸ்வரன் ஏடிஎம் மூலம் எடுத்துச் செலவு செய்ததாகக் கூறப்படுகிறது.
தனது வங்கி கணக்கில் இருந்த பணம் எடுக்கப்பட்டதை அறிந்த ராமு இது குறித்துத் தனது கணவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட கோபத்தில் ராமு தனது தாய் வீட்டுக்குச் சென்ற நிலையில் தனது செயலை எண்ணி மனமுடைந்த ஈஸ்வரன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த கூமாப்பட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழக அரசின் உதவித் தொகையை எடுத்துச் செலவு செய்த விவகாரத்தில் ஒரு உயிர் பறிபோன சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
