இந்தியாவிடம் பாகிஸ்தான் அணி படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, அந்நாட்டு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்கள் குமுறல்களை வெளிப்படுத்தி வருகின்றனர். “பாபர் ஆசம் மீது வெறுப்பு வந்துவிட்டது” என்று ரசிகர்கள் கதறும் வீடியோக்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன. பிப்ரவரி 15 அன்று நடைபெற்ற டி20 உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில், இந்தியா நிர்ணயித்த 175 ரன்களை எட்ட முடியாமல் 114 ரன்களுக்கு பாகிஸ்தான் சுருண்டது. இந்தத் தோல்வி பாகிஸ்தான் ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ ஒன்றில், ஒரு பாகிஸ்தான் ரசிகர் தனது முகத்தில் தேசியக் கொடியை வரைந்துகொண்டு ஓவென அழுதுகொண்டிருக்கிறார். “நீங்கள் வேண்டுமானால் வெற்றியைக் கொண்டாடுங்கள், ஆனால் என்னை நிம்மதியாக அழவிடுங்கள்” என்று அவர் கூறுவது பார்ப்பவர்களைச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது.

மற்றொரு வீடியோவில், ரசிகர்கள் குழுவாக அமர்ந்து லேப்டாப்பில் மேட்ச் பார்க்கின்றனர். ஆரம்பத்திலேயே விக்கெட்டுகள் விழுந்ததும், “இதற்குப் பேசாமல் போட்டியைப் புறக்கணிப்பதாக சொன்னதிலேயே உறுதியாக இருந்திருக்கலாம், இந்த அவமானம் மிஞ்சியிருக்காது” என்று ஆத்திரத்தில் தலையில் அடித்துக்கொள்கின்றனர்.

ஒரு காலத்தில் டி20 கிரிக்கெட்டின் ‘கிங்’ என்று கொண்டாடப்பட்ட பாபர் ஆசம், இந்தப் போட்டியில் வெறும் 5 ரன்களில் அவுட் ஆனது ரசிகர்களை கடும் கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளது. “பாபர் ஆசம் மீது எங்களுக்கு வெறுப்பு வந்துவிட்டது” என ரசிகர்கள் வெளிப்படையாகவே முழக்கமிடுகின்றனர்.

இந்தியாவின் 175 ரன்களைத் துரத்திய பாகிஸ்தான் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர் சாகிப்ஸாதா பர்ஹான் ‘டக்-அவுட்’ ஆகி வெளியேறினார். சாய்ம் அயூப் முதல் பந்தில் சிக்ஸர் அடித்தாலும் அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார். கேப்டன் சல்மான் ஆகா 4 ரன்களிலும், பாபர் ஆசம் 5 ரன்களிலும் நடையைக் கட்டினர். உஸ்மான் கான் (44 ரன்கள்) மட்டும் ஓரளவுக்குப் போராடினார்.

மேலும் மற்ற வீரர்கள் அனைவரும் வரிசையாக வந்துபோக, 18 ஓவர்களிலேயே பாகிஸ்தான் அணி 114 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்திய வீரர்களின் துல்லியமான பந்துவீச்சுக்கு முன்னால் பாகிஸ்தான் வீரர்கள் சீட்டுக்கட்டுகளைப் போலச் சரிந்தது அந்நாட்டு கிரிக்கெட் வரலாற்றில் ஆறாத வடுவாக மாறியுள்ளது.