டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவிடம் பாகிஸ்தான் அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, அந்த அணியின் மூத்த வீரர்களை நீக்க வேண்டும் என முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி போர்க்கொடி தூக்கியுள்ளார்.

குறிப்பாக, தனது மருமகனான வேகப்பந்து வீச்சாளர் ஷாகீன் அப்ரிடியையும் அவர் விட்டுவைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானின் ஒரு தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்ற அப்ரிடி, தனது அதிருப்தியை வெளிப்படையாகப் பதிவு செய்தார். “முடிவெடுக்கும் அதிகாரம் என்னிடம் இருந்தால், பாபர் அசாம், ஷாகீன் அப்ரிடி மற்றும் ஷதாப் கான் ஆகிய மூவரையும் உடனடியாக அணியிலிருந்து நீக்குவேன்.

இவர்கள் நீண்ட காலமாக அணியில் நீடித்தாலும், எதிர்பார்க்கும் முடிவுகளைத் தரவில்லை. இனி புதிய வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் நேரம் வந்துவிட்டது,” என ஆவேசமாகத் தெரிவித்தார். அப்ரிடியின் இந்த கருத்தை மற்றொரு முன்னாள் வீரர் முகமது யூசுப்பும் ஆதரித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “பாபர், ஷாகீன் மற்றும் ஷதாப் ஆகியோரின் டி20 கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது. இனி இவர்களுக்கு வாய்ப்பளிக்கத் தேவையில்லை,” எனத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கு எதிரான இந்தப் போட்டியில் மூத்த வீரர்களின் செயல்பாடு மிகவும் மோசமாக இருந்தது. பாபர் அசாம்: 7 பந்துகளில் வெறும் 5 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஷாகீன் அப்ரிடி: பந்துவீச்சில் 2 ஓவர்களிலேயே 31 ரன்களை வாரி வழங்கினார். ஷதாப் கான்: ஒரு ஓவரில் 17 ரன்களைக் கொடுத்ததோடு, பேட்டிங்கிலும் சொற்ப ரன்களில் அவுட் ஆனார்.

மூத்த வீரர்களின் இந்த ‘சுமார்’ ரக ஆட்டமே பாகிஸ்தானின் தோல்விக்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் பெரும் மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.