இந்தியாவுக்கு எதிரான வாழ்வா சாவா போராட்டத்தில் பாகிஸ்தான் அணி தடுமாறிக் கொண்டிருந்த போதே, அந்நாட்டு கிரிக்கெட் வாரியத் (PCB) தலைவர் மோசின் நக்வி போட்டி முடிவதற்கு முன்பே மைதானத்தை விட்டு வெளியேறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், இந்தியாவின் 176 ரன்கள் என்ற இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து நிலைகுலைந்தது. மைதானத்தில் ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த போதே, விஐபி கேலரியில் அமர்ந்திருந்த மோசின் நக்வி தனது இருக்கையை விட்டு ரகசியமாக வெளியேறினார்.
பாகிஸ்தான் இன்னிங்ஸ் பாதியில் இருக்கும் போதே நக்வி வெளியேறியதை அங்கிருந்த ஊடகவியலாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து இந்துஸ்தான் டைம்ஸ் டிஜிட்டல் தளத்திற்கு கிடைத்த தகவலின்படி, “பாகிஸ்தான் ஊடக நண்பர்கள் மூலம் மோசின் நக்வி மைதானத்தை விட்டு வெளியேறியது உண்மைதான்” என்பது உறுதியாகியுள்ளது.
இந்த உலகக் கோப்பைத் தொடர் தொடங்குவதற்கு முன்பே, “கௌரவம் முக்கியம்” எனக் கூறி இந்தியாவுடனான போட்டியைப் புறக்கணிக்கப் போவதாக நக்வி பெரும் சலசலப்பை ஏற்படுத்தினார். இறுதியில் ஐசிசி-யுடன் பேச்சுவார்த்தை நடத்தி பின்வாங்கினாலும், மைதானத்தில் இந்தியாவிடம் அடிவாங்குவதை அவரால் சகித்துக்கொள்ள முடியவில்லை என்பது அவரது வெளியேற்றத்தின் மூலம் தெளிவாகியுள்ளது.
இந்தியாவின் 175 ரன்களுக்கு பதிலடி கொடுக்க முடியாமல், பவர்பிளேயிலேயே டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை பாகிஸ்தான் பறிகொடுத்தது. ரன் ரேட் எகிறிக் கொண்டே போக, பாகிஸ்தான் வீரர்கள் ரன் எடுக்கவே திணறினர். இறுதியில் 114 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி 61 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
ஒரு அணியின் தலைவர் தனது வீரர்கள் இக்கட்டான நிலையில் போராடும்போது, அவர்களை உற்சாகப்படுத்தாமல் பாதியிலேயே வெளியேறியது “தார்மீகத் தோல்வி” என விமர்சிக்கப்படுகிறது. நக்வியின் இந்தச் செயல், தோல்வியை முன்கூட்டியே ஒப்புக் கொண்டதற்கு சமம் என பாகிஸ்தான் ரசிகர்களே சமூக வலைதளங்களில் விளாசி வருகின்றனர்.
