பிபா (FIFA) உலகக் கோப்பை கால்பந்து தொடரில் வீரர்களின் நடத்தை தொடர்பாகக் கொண்டு வரப்பட்டுள்ள புதிய விதியின் கீழ், முதல் ஆளாகப் பராகுவே அணி வீரர் ரெட் கார்டு (Red Card) வழங்கப்பட்டுத் தண்டிக்கப்பட்டுள்ளார். போட்டியின் போது வீரர்கள் தங்களது வாயை மூடிக்கொண்டு எதிரணி வீரர்களிடம் அவமதிப்பான வார்த்தைகளையோ அல்லது ரகசியத் தகவல்களையோ பரிமாறுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த புதிய விதியை பிபா அமைப்பு அமல்படுத்தியுள்ளது.
இந்நிலையில், குரூப் டி (Group D) பிரிவில் துருக்கி அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில், பராகுவே அணியின் நட்சத்திர வீரர் மிகுவெல் அல்மிரோன் எதிரணி வீரரான முல்தருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அல்மிரோன் தனது வாயை மூடிக்கொண்டு ஏதோ பேசியுள்ளார்.
இதனை அடுத்து துருக்கி வீரர் முல்தர் நடுவரிடம் உடனடியாக முறையிட, வீடியோ உதவி நடுவர் மூலம் அக்காட்சிகள் தீவிரமாகப் பரிசோதிக்கப்பட்டன. அந்த ஆய்வின் முடிவில் புதிய விதியை மீறியதற்காக மிகுவெல் அல்மிரோனுக்கு நடுவர் நேரடியாக ரெட் கார்டு காட்டி மைதானத்தை விட்டு வெளியேற்றினார்.
இதன் மூலம் உலகக் கோப்பை வரலாற்றில் வாயை மூடிப் பேசியதற்காக ரெட் கார்டு பெற்ற முதல் வீரர் என்ற மோசமான சாதனையை அல்மிரோன் பதிவு செய்துள்ளார். இக்கட்டான சூழ்நிலையில் பராகுவே அணி 10 வீரர்களுடன் விளையாட வேண்டியிருந்த போதிலும், ஆட்டத்தின் முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் துருக்கியை வீழ்த்தி தொடரில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்து மாஸ் காட்டியுள்ளது.
