ஐக்கிய அரபு அமீரகம் என்றாலே பலருக்கும் ஆடம்பர வாழ்க்கையும், அதிக சம்பளமும் கொண்ட ஒரு சொர்க்கபுரி தான் நினைவுக்கு வரும். ஆனால், துபாயில் இரண்டு ஆண்டுகள் வசித்த இந்தியர் ஒருவர் அங்கிருக்கும் எதார்த்தமான சவால்கள் குறித்துப் பகிர்ந்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

துபாயில் பிரகாசமான விளக்குகளும் நவீன வசதிகளும் இருப்பது உண்மைதான் என்றாலும், அங்கு வேலை தேடுவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்றும், பல நிறுவனங்களுக்கு விண்ணப்பித்தாலும் முறையான பதில் கிடைக்காமல் போவது மனச்சோர்வை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரிக்கிறார்.

குறிப்பாக, துபாயில் வாழ்க்கை நடத்துவதற்கான செலவு மிக அதிகம் எனக் குறிப்பிடும் அவர், கடினமாக உழைத்து ஈட்டும் சம்பளத்தில் பெரும் பகுதியை வாடகையே எடுத்துக்கொள்வதாகக் கூறுகிறார்.

எதிர்பாராத அபராதங்கள் மற்றும் இதர செலவுகளால் நினைத்தபடி சேமிக்க முடிவதில்லை என்பதும், மற்றவர்களின் ஆடம்பரச் செலவுகளைப் பார்த்து நமக்கும் ஏற்படும் ஒருவிதமான மன அழுத்தம் அங்கு வாழ்வதில் இருக்கும் மற்றொரு சிக்கல் என்றும் அவர் விளக்குகிறார்.

துபாய் பாதுகாப்பான மற்றும் பல நாட்டு மக்களைச் சந்திக்கும் வாய்ப்புள்ள நகரமாக இருந்தாலும், அங்கு செல்லும் முன்பே அதன் நிறைகுறைகளை முழுமையாகப் புரிந்துகொண்டு திட்டமிடுவது அவசியம் என்பதே அவரது கருத்தாக உள்ளது.