பாகிஸ்தானில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வால் அந்நாட்டு மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில், அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய சமூக வலைதளப் பதிவர் (Vlogger) ஒருவரிடம், பாகிஸ்தான் மக்கள் தங்கள் நாட்டு அரசுக்கு எதிராக ஆவேசமாகப் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், இந்திய வ்லாகர் ஒருவர் பாகிஸ்தானில் உள்ள ஒரு காய்கறி சந்தைக்குச் சென்று அங்கிருப்பவர்களிடம் உரையாடுகிறார். அப்போது அங்கிருந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள், இந்திய வ்லாகர் என்பதை அறிந்தவுடன் அவரிடம் தங்கள் நாட்டு அரசின் மீதான கோபத்தைக் கொட்டித் தீர்த்தனர்.

அவர்கள் பேசுகையில், “நவாஸ் ஷெரீப் எங்களை ஒட்டுமொத்தமாக அடித்துத் தின்றுவிட்டார். ஒட்டுமொத்த நாட்டையும் அவர் அழித்துவிட்டார்” என ஆவேசமாகக் கூறினர். இதைக் கேட்ட இந்திய வ்லாகரே ஒரு நிமிடம் திகைத்துப் போனார்.

வீடியோவின் ஒரு கட்டத்தில், பாகிஸ்தான் நபர் ஒருவர் அந்நாட்டு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை மிகவும் ஆபாசமான வார்த்தைகளால் திட்டியபடி கேமரா முன் பேச முயன்றார். இதைக் கண்ட இந்திய வ்லாகர் உடனடியாக அந்த இடத்தை விட்டு நகரத் தொடங்கினார். “சகோதரரே, இதைப் பற்றி நான் எதுவும் பேச விரும்பவில்லை. நான் பத்திரமாக எனது நாட்டிற்குத் திரும்ப வேண்டும். அரசுக்கு எதிராக என்னால் கருத்துச் சொல்ல முடியாது” எனக் கூறிவிட்டு அங்கிருந்து விடைபெற்றார்.

https://www.facebook.com/reel/1959794138747190/?t=0

பாகிஸ்தானில் தற்போது காய்கறிகள், பழங்கள் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்துள்ளது. சாதாரண ஏழை எளிய மக்களால் அன்றாட உணவிற்கே வழியில்லாத சூழல் நிலவுவதால், அந்நாட்டு மக்கள் தங்கள் தலைவர்கள் மற்றும் அரசின் கொள்கைகள் மீது மிகுந்த அதிருப்தியில் உள்ளனர்.

இந்த வீடியோ ‘Gaffar Musafir’ என்ற பெயரில் பகிரப்பட்டுள்ளது. இதை லட்சக்கணக்கான மக்கள் பார்த்துள்ள நிலையில், இணையவாசிகள் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். ஒரு தரப்பினர் பாகிஸ்தானின் நிலையை எண்ணி வருந்தினாலும், மற்றொரு தரப்பினர் இந்தியாவிலும் விலைவாசி உயர்வு இருப்பதாக ஒப்பிட்டுப் பேசி வருகின்றனர். இருப்பினும், அந்நாட்டு மக்கள் அந்நிய நாட்டுப் பயணியிடம் தங்கள் நாட்டின் அவல நிலையை வெளிப்படையாகப் பேசியது சர்வதேச அளவில் பேசுபொருளாகியுள்ளது