மறைந்த அமெரிக்க நிதியாளரும், பாலியல் குற்றவாளியுமான ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ரகசிய மின்னஞ்சல்கள் (Emails) தற்போது வெளியாகியுள்ளன. இதில், பொதுவாக எதிர்பார்க்கப்படும் நிதி மோசடித் தகவல்களுக்குப் பதிலாக, பாகிஸ்தானின் பழங்குடியினப் பகுதிகள் மற்றும் தலிபான் இயக்கத்தின் உள்கட்டமைப்பு குறித்த திடுக்கிடும் தகவல்கள் இடம்பெற்றுள்ளது உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இது தொடர்பாக வெளியாகியுள்ள மின்னஞ்சல்களில், 2013-ஆம் ஆண்டு ஏப்ரல் 30-ஆம் தேதி நஸ்ரா ஹாசன் என்ற களப் பணியாளர் எப்ஸ்டீனுக்கு அனுப்பிய செய்தி முக்கியமானது. அதில், பாகிஸ்தானின் பெஷாவர் நகரிலிருந்து தான் வெளியேறுவதைக் குறிப்பிட்ட அவர், அந்நகரை “உலகின் ஜிஹாத் தலைநகரம்” என வர்ணித்துள்ளார்.
அப்போது பாகிஸ்தானில் தேர்தல் நடைபெறவிருந்த சூழலில், அங்கு நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்புகள் காரணமாகவே தகவல் தொடர்பில் சிக்கல் ஏற்பட்டதாக அவர் எப்ஸ்டீனிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.
அல்-கொய்தா மற்றும் தலிபான் அமைப்புகளின் கோட்டையாகக் கருதப்பட்ட பாகிஸ்தானின் ஏழு பழங்குடியின ஏஜென்சிகளுடன் (FATA) அந்தப் பெண் தொடர்பில் இருந்ததை இந்த மின்னஞ்சல்கள் உறுதிப்படுத்துகின்றன.
மேலும், 2015 ஆகஸ்ட் 10-ஆம் தேதி எப்ஸ்டீனுக்கு அனுப்பப்பட்ட மற்றொரு மின்னஞ்சலில், தலிபான் நிறுவனர் முல்லா உமரின் மறைவுக்குப் பிறகு, அந்த அமைப்பின் தலைமைப் பொறுப்பிற்கு முல்லா அக்தர் மன்சூர் வருவது குறித்த விரிவான உளவுத் தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
இந்த ரகசிய ஆவணங்களில் பாகிஸ்தானின் போலியோ ஒழிப்புத் திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மௌலானா சாமி-உல்-ஹக் போன்ற செல்வாக்குமிக்க மதகுருமார்கள் இந்தத் திட்டங்களுக்கு எவ்வாறு ஆதரவளிக்கிறார்கள் என்பது குறித்த விவரங்கள் எப்ஸ்டீன் அல்லது அவரது உடன் இருப்பவர்களிடம் பகிரப்பட்டுள்ளன.
நிதி மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகளுக்குப் பெயர் போன எப்ஸ்டீனின் ஆவணங்களில், உலகளாவிய சுகாதாரப் பணிகள், குறிப்பாக பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை தொடர்பான மனிதாபிமானப் பணிகள் குறித்த விவாதங்கள் ஏன் இடம் பெற்றன என்பது கேள்விகளை எழுப்பியுள்ளது.
பாகிஸ்தானின் அரசியல், தீவிரவாத அமைப்புகளின் அதிகாரப் போட்டி மற்றும் மனிதாபிமானப் பணிகள் தொடர்பான தகவல்கள் எப்ஸ்டீன் போன்ற ஒரு நபரின் கைக்கு எப்படிச் சென்றன என்பது குறித்து அமெரிக்க நீதித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். பாலியல் குற்றவாளியாக அறியப்பட்ட ஒருவரின் வட்டத்தில், சர்வதேச அரசியல் மற்றும் தீவிரவாத உளவுத் தகவல்கள் புழங்கியிருப்பது பெரும் மர்மமாகப் பார்க்கப்படுகிறது.
