போலந்து நாட்டின் ஸ்வெண்டோக்லோவிஸ் நகரில், 15 வயது சிறுமியாக இருந்தபோது காணாமல் போனதாகக் கருதப்பட்ட பெண், 27 ஆண்டுகளுக்குப் பிறகு எலும்பும் தோலுமாக அதே வீட்டில் மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த ஜூலை மாதம், ஒரு அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து விசித்திரமான சத்தங்கள் வருவதாக அண்டை வீட்டார் போலீசாருக்குத் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், 42 வயதான மிரேலா என்ற பெண்ணைக் கண்டெடுத்தனர். அவர் உயிருக்குப் போராடும் நிலையில், மிகவும் நலிவடைந்த நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
போலீஸ் அதிகாரி அன்னா ஹரினியாக் இது குறித்துக் கூறுகையில், “ஆரம்பத்தில் அந்தப் பெண் எல்லாம் நலமாக இருப்பதாகக் கூறினார். ஆனால், அவரது உடல்நிலை மற்றும் காயங்களைப் பார்த்தபோது, அவர் நீண்டகாலம் சித்திரவதை செய்யப்பட்டிருப்பது தெரிந்தது. உடனடியாக மருத்துவக் குழுவினர் வரவழைக்கப்பட்டனர்” என்றார்.
மிரேலா கடைசியாக 1998-ஆம் ஆண்டு, தனது 15 வயதில் பொதுவெளியில் காணப்பட்டார். அவர் வீட்டை விட்டு ஓடிவிட்டதாக ஊர் மக்களுக்குத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடந்த 27 ஆண்டுகளாக அவர் அந்த வீட்டின் ஒரு சிறிய அறைக்குள்ளேயே பூட்டி வைக்கப்பட்டிருந்தது தற்போது தெரியவந்துள்ளது.
இந்த நீண்ட காலத்தில் அவர் வெளியுலகையே பார்த்ததில்லை. ஒருமுறை கூட மருத்துவமனைக்கோ அல்லது சிகையலங்கார நிலையத்திற்கோ அவர் அழைத்துச் செல்லப்படவில்லை. அவரிடம் அடையாள அட்டை கூட இல்லை; இந்த உலகிலிருந்தே அவர் துண்டிக்கப்பட்டிருந்தது விசாரணையில் உறுதியானது.
மருத்துவப் பரிசோதனையில் மிரேலா கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாடு, தொற்று நோய்கள் மற்றும் சுகாதாரமற்ற சூழலில் வாழ்ந்ததால் ஏற்பட்ட பாதிப்புகளால் அவதிப்படுவது தெரியவந்தது. அவரது பற்களும் கூந்தலும் முற்றிலுமாகச் சிதைந்துவிட்டன. அவர் குணமடைய நீண்டகால சிகிச்சை தேவைப்படுவதால், சமூக வலைதளங்கள் மூலம் அவருக்காக நிதி திரட்டப்பட்டு வருகிறது.
போலந்து அரசு வழக்கறிஞர் அக்னீஸ்கா க்வதேரா கூறுகையில், “ஒரு ஆரோக்கியமான 15 வயதுச் சிறுமி திடீரென வீட்டிற்குள் முடங்கியது ஏன்? இத்தனை ஆண்டுகளாக ஒருவர்கூட அவரைப் பற்றி விசாரிக்காதது எப்படி? என்பது குறித்துத் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது” என்றார்.
இதேபோல பிரேசிலின் சொரோகாபா (Sorocaba) நகரிலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அங்கு 6 வயதுச் சிறுமி பிறந்தது முதல் ஒரு இருட்டு அறைக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்தார். திரவ உணவை மட்டுமே உண்டு வளர்ந்த அந்தச் சிறுமிக்குச் பேசக் கூடத் தெரியவில்லை. அந்தச் சிறுமியும் மீட்கப்பட்டுள்ளார். மேலும் வீட்டிற்குள்ளேயே நடக்கும் இத்தகைய மனித உரிமை மீறல்கள் உலக நாடுகளை அதிரசெய்துள்ளன.
