உத்தரப் பிரதேச மாநிலம் ஏட்டா மாவட்டத்தில், திருமண விழா ஒன்றில் ஏற்பட்ட தகராறில் கர்ப்பிணி மனைவியை மாடியிலிருந்து கணவன் கீழே தள்ளிவிட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஒரு  தம்பதியினரிடையே, ஒரு திருமண விழாவிற்குச் செல்வது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த கணவன், தனது கர்ப்பிணி மனைவியை வீட்டின் மொட்டை மாடியிலிருந்து கீழே தள்ளிவிட்டதாகக் கூறப்படுகிறது.

மனைவியைக் கீழே தள்ளிவிட்ட பிறகு, அந்த நபர் தனது மாமனாருக்குத் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது, “உன் மகளை உயிரோடு பார்க்க வேண்டுமானால் உடனே வா” என்று மிரட்டல் விடுத்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெண்ணின் குடும்பத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, படுகாயமடைந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை, தனது மகளின் கணவன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். “எனது மகளை அவர்கள் திட்டமிட்டே மாடியிலிருந்து தள்ளிவிட்டுள்ளனர்” என்று அவர் புகாரில் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், புகாரை மறுத்துள்ள கணவன் தரப்பினர், அந்தப் பெண் தானாகவே மாடியிலிருந்து குதித்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில் இது குடும்பத் தகராறால் ஏற்பட்ட அசம்பாவிதம் எனத் தெரிவதாகவும், புகாரின் அடிப்படையில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கர்ப்பிணிப் பெண் என்றும் பாராமல் கணவன் செய்த இந்தத் துணிகரச் செயல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.