வயது என்பது வெறும் எண்தான்” என்பதை நிரூபிக்கும் வகையில், ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த 89 வயது ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர், பெங்களூருவில் உள்ள தனது சிறிய இல்லத்தை உற்சாகத்துடன் சுற்றிக்காட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் பலரது இதயங்களை வென்றுள்ளது.

ஹரியானா கேடரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரியான கர்தார் சிங் தோமர், தற்போது பெங்களூருவில் உள்ள ‘மானசம்’ முதியோர் இல்ல குடியிருப்பில் வசித்து வருகிறார். பிரகாசமான ஆரஞ்சு நிற குர்தா மற்றும் பாரம்பரிய இமாச்சலப் பிரதேச தொப்பி அணிந்து, ஒரு அனுபவம் வாய்ந்த வீடியோ கலைஞர் போல அவர் தனது 1 பி.எச்.கே (1 BHK) வீட்டைச் சுற்றிக்காட்டிய விதம் இணையவாசிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

“முதல்முறையாக எனது பிளாட்டைப் பற்றி விலாக் செய்கிறேன்” என்று உற்சாகத்துடன் தொடங்கும் தோமர், “எனக்கு 89 வயதாகிறது, நான் வாழ்க்கையை முழுமையாக அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். இது எனது சிறிய வீடு, ஆனால் இது எனக்குச் சொர்க்கம் போன்றது” என்று பெருமையுடன் கூறுகிறார்.

வீட்டில் உள்ள சோபா-பெட் வசதி, படிப்பதற்கேற்ற டைனிங் டேபிள் மற்றும் சுத்தமான சமையலறை ஆகியவற்றை அவர் விவரிக்கும் விதம், முதியோர்களுக்கும் சுதந்திரமான வாழ்க்கை சாத்தியம் என்பதைப் பறைசாற்றுகிறது.

முதியோர்களின் பாதுகாப்பிற்காக குளியலறையில் அமைக்கப்பட்டுள்ள ‘ஆன்டி-ஸ்கிட்’ (வழுக்காத) தரைத்தளம் தமக்கு மிகவும் பிடித்திருப்பதாக அவர் குறிப்பிடுகிறார். மேலும், தனது படுக்கையறையில் உள்ள பெரிய கண்ணாடி ஜன்னல்கள் வழியாக வரும் காற்றோட்டத்தைக் காட்டிய அவர், “இங்கே மின்விசிறியே தேவையில்லை” என்கிறார்.

 

தனது வீட்டின் பால்கனியில் நின்றபடி சுற்றியுள்ள பசுமையைக் காட்டிய அவர், “எந்தவித சத்தமும் இல்லை, மாசும் இல்லை. மிகுந்த அமைதியாக இருக்கிறது. பெங்களூருக்கு வந்தது வாழ்க்கையில் ஒரு பெரிய நிம்மதியைத் தந்துள்ளது” என்று நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவிற்குப் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. “மிகவும் மகிழ்ச்சியான மனிதர், வாழ்க்கையை இப்படித்தான் ரசிக்க வேண்டும்” என்று ஒரு பயனரும், “சார், உங்கள் இளைய சக ஊழியரிடமிருந்து மரியாதையும் அன்பும்” என்று ஒரு காவல் துறை அதிகாரியும் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளனர்.

தள்ளாத வயதிலும் தற்சார்புடனும், மகிழ்ச்சியுடனும் வாழும் கர்தார் சிங் தோமரின் இந்த வீடியோ, முதுமை குறித்த நேர்மறையான சிந்தனையை பலரிடமும் ஏற்படுத்தியுள்ளது.