விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த புவனேஸ்வரி சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு காவலராகப் பணியாற்றி வந்தார். இவருடைய கணவர் சிலம்பரசன் ஆவடி சிறப்பு காவல்படையில் காவலராக உள்ளார். காதலித்து திருமணம் செய்துகொண்ட இந்த தம்பதியினர் எழும்பூர் காவலர் குடியிருப்பில் வசித்து வந்தனர்.

புவனேஸ்வரி தனக்கு தெரிந்த ஒருவருக்கு கடன் வாங்கிக் கொடுத்தது தொடர்பாக கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுபோதையில் வீட்டிற்கு வந்த சிலம்பரசன் இது தொடர்பாக புவனேஸ்வரியை தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த புவனேஸ்வரி தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காலையில் எழுந்து பார்த்த சிலம்பரசன் தனது மனைவி சடலமாகத் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இந்தச் சம்பவத்தில் புவனேஸ்வரியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தாயார் அன்புக்கரசி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தனது மகள் திருமணமான நாள் முதலே வரதட்சணை கொடுமைக்கும், கணவரின் தாக்குதலுக்கும் உள்ளானதாக அவர் அந்தப் புகாரில் குறிப்பிட்டுள்ளார். உயிரிழப்பதற்குச் சற்று நேரத்திற்கு முன்பு கூட நிலம் வாங்குவதற்கு 2 லட்சம் ரூபாய் பணம் கேட்டு புவனேஸ்வரி அழுதுகொண்டே பேசியதாக அவரது தாயார் தெரிவித்துள்ளார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்த எழும்பூர் போலீசார் சிலம்பரசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.