திண்டுக்கல்லில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன், அவர்களுக்குத் தனது ஆதரவைத் தெரிவித்தார்.

அப்போது பேசிய அவர், இன்னும் ஒன்றரை அமாவாசை முடிந்து பௌர்ணமி வருவதற்குள் தமிழகத்தில் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றும், அடுத்ததாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமையவுள்ள ஆட்சியில் விரிவுரையாளர்களின் அனைத்துக் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்றும் உறுதி அளித்தார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்ற கட்சிகளின் கூட்டணியை ‘டெல்லி ஆட்சி’ என்று விமர்சிப்பது குறித்துப் பேசிய சீனிவாசன், அது டெல்லி ஆட்சியாகவே இருந்தாலும் கவலையில்லை என்றார்.

ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கும், ரயில்வே போன்ற திட்டங்களைப் பெறுவதற்கும் மத்திய அரசைத்தான் நாட வேண்டியுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், மத்திய அரசுடன் இணக்கமாகச் செயல்படுவதில் தவறு ஏதுமில்லை என்று விளக்கமளித்தார்.

மேலும், நான்கு ஆண்டுகள் ஆட்சியை முடித்துவிட்டு இப்போது மக்களிடம் கனவு என்ன என்று கேட்பது வேடிக்கையாக உள்ளது என்று திமுகவை அவர் விமர்சித்தார்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என அனைத்துத் தரப்பினரும் திமுக அரசுக்கு எதிராகப் போராடி வருவதாகவும், இந்த ஆட்சி எதையும் செய்யத் தகுதியற்ற ஆட்சி என்றும் அவர் கடுமையாகச் சாடினார்.