உத்தரப் பிரதேச மாநிலம் அவுரையா மாவட்டத்தில், ஒரு இளம்பெண் திடீரென மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சீகன்பூர் கிராமத்தைச் சேர்ந்த ரீனா என்ற பெண், தனது படுக்கையில் துணி மற்றும் நகைகளை அப்படியே வைத்துவிட்டு மாயமாகியிருந்தார்.
அதிர்ச்சியூட்டும் விதமாக, அவர் படுத்திருந்த இடத்தில் சுமார் 5 அடி நீளமுள்ள பாம்பின் சட்டை (கட்டை) கிடந்ததால், அந்தப் பெண் ‘இச்சாதாரி நாகினியாக’ மாறி மறைந்துவிட்டதாகக் கிராம மக்கள் மத்தியில் மூடநம்பிக்கை பரவியது. இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி பெரும் விவாதத்தை உண்டாக்கியது.
ஆனால், இந்த மர்மத்திற்குப் பின்னால் இருந்த உண்மையை அந்தப் பெண்ணே தற்போது உடைத்துள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், தான் நாகினியாக மாறவில்லை என்றும், தனது காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறி விருப்பப்பட்டு திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் எனப் போலீசாருக்குக் கோரிக்கை விடுத்துள்ள அவர், வீணான வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கூறியுள்ளார். இதன் மூலம் அந்தப் பெண்ணைச் சுற்றி நிலவி வந்த ‘நாகினி’ வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
