வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே உள்ள கொல்லமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ராகவன், செவிலியராகப் பணியாற்றிய சுவேதாவை காதலித்து கடந்த 2022-ம் ஆண்டு இரு வீட்டாரின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு மதுப்பழக்கத்திற்கு அடிமையான ராகவன், வேலைக்குச் செல்லாமல் தனது மனைவி சுவேதாவைத் தொடர்ந்து துன்புறுத்தி வந்ததோடு, மற்ற பெண்களுடன் தவறான உறவிலும் இருந்துள்ளார்.
இதனைச் சுவேதாவின் தந்தை அமுல்ராஜ் பலமுறை கண்டித்தும் ராகவன் தனது போக்கை மாற்றிக்கொள்ளவில்லை. தனது மகளின் வாழ்க்கையைச் சீரழிப்பதாக ராகவன் மீது ஆத்திரமடைந்த அமுல்ராஜ், தனது நண்பர் கார்த்திக் என்பவருடன் இணைந்து ராகவனைக் கொலை செய்யத் திட்டமிட்டார்.
இதன்படி, கடந்த பிப்ரவரி 8-ம் தேதி ராகவனைச் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர். ரத்த வெள்ளத்தில் ராகவன் சடலமாகக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்குத் தகவல் அளித்தனர்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அமுல்ராஜைக் கைது செய்தனர். இந்த வழக்கில் மேலும் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
