வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே, பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்த மருமகனை மாமனாரே ஆள் வைத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொல்லமங்கலம் பகுதியைச் சேர்ந்த ராகவன் என்பவர், செவிலியரான சுவேதாவை காதலித்து வீட்டின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்துள்ளார்.
ஆனால் திருமணத்திற்குப் பிறகு வேலைக்குச் செல்லாமல் மதுவுக்கு அடிமையான ராகவன், தனது மனைவி சுவேதாவை அடித்துத் துன்புறுத்தியதுடன், பல பெண்களுடன் கள்ளத்தொடர்பு வைத்துக்கொண்டு ‘தீராத விளையாட்டுப் பிள்ளையாக’ வலம் வந்துள்ளார். இதனைப் பலமுறை சுவேதாவின் தந்தை அமல்ராஜ் கண்டித்தும் ராகவன் திருந்தவில்லை.
தனது மகளின் வாழ்க்கை நாசமாவதைக் கண்டு ஆத்திரமடைந்த அமல்ராஜ், தனது நண்பர் கார்த்திக் என்பவருடன் சேர்ந்து ராகவனை தீர்த்துக்கட்ட ‘ஸ்கெட்ச்’ போட்டுள்ளார்.
கடந்த பிப்ரவரி 8-ம் தேதி ராகவனை ஓரிடத்திற்கு வரவழைத்து, கட்டையால் அடித்து அரிவாளால் வெட்டி கொடூரமாகக் கொலை செய்துள்ளனர்.
இந்த வழக்கில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மாமனார் அமல்ராஜை போலீசார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
காதலித்து கரம் பிடித்த கணவன், தந்தையாலேயே கொல்லப்பட்டதை அறிந்து மனைவி சுவேதா கண்ணீர் விட்டு கதறுவது அந்தப் பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
