கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள டம்ளர் ரிட்ஜ் மேல்நிலைப் பள்ளியில் அரங்கேறிய கோரமான துப்பாக்கிச் சூடு சம்பவம் உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவரான 18 வயது திருநங்கை ஜெஸ்ஸி வான் ரூட்செலர் என்பவர், முதலில் தனது வீட்டிற்குச் சென்று 39 வயது தாய் மற்றும் 11 வயது தம்பியைச் சுட்டுக்கொன்றுள்ளார்.
அதன் பின்னர் தான் பயின்ற பள்ளிக்குச் சென்று அங்கிருந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியுள்ளார். இந்தத் தாக்குதலில் மூன்று மாணவிகள், இரண்டு மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியை என மொத்தம் ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தாக்குதலுக்குப் பிறகு ஜெஸ்ஸி பள்ளியின் நூலகத்திலேயே தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.
இந்தக் கொடூரமான துப்பாக்கிச் சூட்டில் மொத்தம் 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 24-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தாக்குதலில் ஈடுபட்ட ஜெஸ்ஸிக்கு நீண்டகாலமாக மனநலப் பாதிப்புகள் இருந்ததாகவும், இது தொடர்பாகப் போலீசார் ஏற்கனவே பலமுறை அவரது வீட்டிற்குச் சென்று விசாரணை நடத்தியுள்ளதும் தெரியவந்துள்ளது.
இந்தத் துயரச் சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள கனடா பிரதமர் மார்க் கார்னி, உயிரிழந்தவர்களின் நினைவாக நாடு முழுவதும் ஏழு நாட்களுக்குத் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்று அறிவித்துள்ளார். 2020-ஆம் ஆண்டிற்குப் பிறகு கனடாவில் நடந்த மிக மோசமான வன்முறைச் சம்பவமாக இது பதிவாகியுள்ளது.
