துருக்கி அதிபர் தையிப் எர்டோகன் தனது அமைச்சரவையில் மேற்கொண்டுள்ள அதிரடி மாற்றத்தின் ஒரு பகுதியாக, இஸ்தான்புல் நகரின் தலைமை அரசு வழக்கறிஞராக இருந்த அகின் குர்லெக்கை புதிய நீதி அமைச்சராக நியமித்துள்ளார். இதற்கு அந்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியான குடியரசு மக்கள் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது.

இந்நிலையில் நாடாளுமன்றத்தில் புதிய அமைச்சராக அகின் குர்லெக் பதவியேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றபோது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவருக்கு எதிராகக் கோஷமிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். குர்லெக் பதவியேற்பதைத் தடுக்க அவர்கள் முயன்றதால், ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கும் எதிர்க்கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அது திடீரெனப் பெரும் கைகலப்பாக மாறியது.

நாடாளுமன்ற வளாகத்திலேயே உறுப்பினர்கள் ஒருவரையொருவர் சரமாரியாகத் தாக்கிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவைக்காவலர்கள் தலையிட்டு மோதலில் ஈடுபட்டவர்களைத் தடுக்க முயன்றபோதிலும், நீண்ட நேரம் அமளி நீடித்தது. இந்த அமளிக்கு மத்தியிலும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் அகின் குர்லெக்கைச் சுற்றி ஒரு பாதுகாப்பு வளையம் போல நின்றுகொள்ள, அவர் தனது பதவியேற்பு உறுதிமொழியை வாசித்தார்.

இஸ்தான்புல் மேயர் எக்ரெம் இமாமோக்லு உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் மீதான வழக்குகளைக் கையாண்டவர் என்பதால், குர்லெக்கின் நியமனம் நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதிக்கும் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.