திருவள்ளூர் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலகத்தின் சார்பில் திருத்தணி அரசு மருத்துவமனையில் நேற்று வருவாய் கோட்ட அளவிலான சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற நிலையில், 12 வயது மாற்றுத்திறனாளி சிறுமி ஒருவரும் தனது குடும்பத்தினருடன் வந்திருந்தார்.
மருத்துவப் பரிசோதனைகள் முடிந்த பிறகு அந்தச் சிறுமி கழிப்பறை அருகே தனியாக நின்றுகொண்டிருந்தபோது, அங்கு வந்த வாலிபர் ஒருவர் சிறுமிக்கு பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்துள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பொதுமக்கள், அந்த வாலிபரைப் பிடித்துத் தர்ம அடி கொடுத்துப் பின்னர் திருத்தணி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் பிடிபட்ட நபர் திருத்தணி ஆறுமுகசாமி கோவில் தெருவைச் சேர்ந்த லோகேஷ் என்பது தெரியவந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில், இது போன்ற மக்கள் கூடும் முகாம்களில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததே இச்சம்பவத்திற்குக் காரணம் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற அரசு மருத்துவமனை வளாகத்திலேயே சிறுமிக்கு நேர்ந்த இந்த அநீதி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாகப் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
