செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தையில் நடைபெற்ற திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 2026 சட்டமன்றத் தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவதே இலக்கு என்று முழங்கினார். “234 தொகுதிகளிலும் இந்த ஸ்டாலின்தான் வேட்பாளர் என்று நினைத்து ஒவ்வொரு தொண்டரும் களப்பணியாற்ற வேண்டும்” என்று அவர் கேட்டுக்கொண்டார்.

திமுக அரசு கடந்த ஐந்தாண்டுகளில் செய்துள்ள சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்லுமாறு அறிவுறுத்திய அவர், கூட்டணிக் கட்சிகளுடன் மிகுந்த ஒற்றுமையுடன் செயல்பட்டு வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

குறிப்பாக, சென்னை மற்றும் வட தமிழகம் எப்போதுமே திமுகவின் கோட்டை என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்க வேண்டும் என்று முகவர்களிடம் ஸ்டாலின் பேசினார். ஒவ்வொரு முகவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 100 வாக்காளர்களைக் குறைந்தது ஐந்து முறையாவது நேரில் சந்தித்து அரசின் நலத்திட்டங்களை விளக்கிக் கூற வேண்டும் என்றும் அவர் கட்டளையிட்டார்.

2021-ம் ஆண்டை விட தற்போது தமிழகம் முழுவதும் திமுகவிற்கு ஆதரவு பெருகியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், சொன்ன வாக்குறுதிகள் மட்டுமல்லாது சொல்லாத பல திட்டங்களையும் நிறைவேற்றியுள்ளதாகத் தெரிவித்தார்.