உத்தரப்பிரதேச மாநிலம் அவுரையா மாவட்டத்தில் ரீனா என்ற 24 வயது இளம்பெண் மர்மமான முறையில் காணாமல் போனது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் தூங்கிய படுக்கையில் துணிகள், வளையல்கள், மோதிரங்கள் மற்றும் ஒரு பாம்பின் சட்டை கிடந்ததைக் கண்ட குடும்பத்தினர், அவர் ஒரு ‘நாகினியாக’ மாறிவிட்டதாக நம்பினர்.
ரீனா கடந்த சில மாதங்களாகவே தனக்கு கனவில் பாம்புகள் வருவதாகக் கூறி வந்ததாலும், சமீபத்தில் ஒரு நாகதேவதை சிலையை வாங்கி வந்ததாலும், தொலைக்காட்சி சீரியல்களில் வருவது போல இது ஒரு அதிசயமான உருமாற்றம் என்று ஊர் மக்களும் அவரது குடும்பத்தினரும் தவறாகக் கருதினர்.
இருப்பினும், போலீஸார் நடத்திய விசாரணையில் இந்த விசித்திரமான கதையின் பின்னணியில் இருந்த உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. ரீனாவிற்கு அவரது குடும்பத்தினர் திருமண ஏற்பாடுகளைச் செய்து வந்த நிலையில், அதில் விருப்பமில்லாத அவர் அதே கிராமத்தைச் சேர்ந்த தனது காதலனுடன் தப்பிச் செல்லத் திட்டமிட்டுள்ளார்.
இதற்காக கடந்த மூன்று மாதங்களாகவே ஒரு திட்டத்தைத் தீட்டி, குடும்பத்தினர் தன்னைத் தேடாமல் இருக்க பாம்பாக மாறிவிட்டதாக நம்ப வைக்கும் வகையில் ஆதாரங்களைச் சிதறவிட்டுச் சென்றுள்ளார். இறுதியில் செல்போன் சிக்னல் உதவியுடன் போலீஸார் அவரை மீட்டபோது, அவர் தனது காதலனுடன் இருப்பதை உறுதி செய்தனர்.
