உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தில் உறவுமுறையைச் சிதைக்கும் வகையில் 35 வயது பெண் ஒருவர் தனது 15 வயது மகனுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிபிகஞ்ச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வரும் சிறுவனுக்கும் அவனது முறைப்படியான சித்திக்கும் இடையே நீண்ட நாட்களாகப் பழக்கம் இருந்து வந்துள்ளது. சிறுவனின் சித்தப்பா வேலை நிமித்தமாக வெளியூரில் தங்கியிருந்த நிலையில், இவர்கள் இருவரும் மணிக்கணக்கில் பேசி வந்ததை உறவினர்கள் சாதாரணமாகக் கருதியுள்ளனர்.

ஆனால் கடந்த ஜனவரி 26 ஆம் தேதி இருவரும் திடீரென மாயமானதைத் தொடர்ந்து, குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்து பல இடங்களில் தேடியுள்ளனர். கௌரவம் கருதி முதலில் இந்தத் தகவலை ரகசியமாக வைத்திருந்த உறவினர்கள், எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் இறுதியில் காவல்துறையில் புகார் அளித்தனர்.

புகாரைப் பெற்றுக்கொண்ட காவல்துறையினர் நவீனத் தொழில்நுட்ப உதவியுடன் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்திய நிலையில், திங்கட்கிழமை அன்று இருவரையும் அண்டை மாவட்டப் பகுதியில் வைத்துப் பிடித்தனர். பிடிபட்ட இருவரிடமும் நடத்திய விசாரணையில், அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டு வாழ்வதற்குத் திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.

காவல்துறையினர் முன்னிலையில் அந்தப் பெண் தனது மருமகனுடன்தான் வாழ்வேன் என ஒற்றைக்காலில் நின்றதால் காவல் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இறுதியில் இரு வீட்டாரையும் அழைத்து காவல்துறை அதிகாரிகள் நீண்ட நேரம் அறிவுரை வழங்கினர். உறவினர்களின் கடும் போராட்டத்திற்குப் பிறகு சிறுவன் தனது பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டான்.

அந்தப் பெண் அவரது தாய் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். இரு தரப்பினரும் சட்டப்பூர்வ நடவடிக்கை வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டதால் இந்த விவகாரம் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது.