உத்தரப் பிரதேச மாநிலம் பதாவுன் மாவட்டத்தில், குடிபோதைக்கு அடிமையான கணவர் ஒருவர் தனது மனைவியை ஆயிரம் ரூபாய்க்கு நண்பர்களிடம் விற்பனை செய்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவில் லைன்ஸ் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமம் ஒன்றில் வசிக்கும் அந்தப் பெண், தனது கணவர் போதைப்பொருள் பழக்கத்தால் தொடர்ந்து குடும்பப் பிரச்சனையில் ஈடுபட்டு வந்ததாகத் தெரிவித்துள்ளார். சம்பவத்தன்று இரவு, கணவர் தனது இரண்டு நண்பர்களை வீட்டிற்கு அழைத்து வந்து அவர்களிடம் ஆயிரம் ரூபாயைப் பெற்றுக்கொண்டு, தனது மனைவியை அவர்களிடம் ஒப்படைத்துள்ளார்.
தப்பிக்க முயன்ற அந்தப் பெண்ணை மிரட்டிப் பணியவைத்த அந்த இரண்டு நபர்களும் அவரைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்தக் கொடுமையிலிருந்து தப்பிய அந்தப் பெண், காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்தார். பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரைப் பெற்றுக்கொண்ட காவல்துறையினர், கூட்டுப் பாலியல் வன்கொடுமை மற்றும் குற்றச் சதி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து துரித நடவடிக்கையில் இறங்கினர்.
பிப்ரவரி 8-ஆம் தேதி நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், தலைமறைவாக இருந்த கணவர் மற்றும் அவரது இரண்டு நண்பர்கள் ஆகிய மூவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட பெண் மருத்துவப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு, விரைவு நீதிமன்றம் மூலம் விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்குத் தகுந்த தண்டனை பெற்றுத் தரப்படும் என்று காவல்துறை அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.
