இமாசல பிரதேசத்தின் பனி அடர்ந்த பகுதியில் கடந்த 29-ந்தேதி இரவு கார் ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து நடந்து மறுநாள் மதியமே உள்ளூர்வாசிகளுக்குத் தெரியவந்ததை அடுத்து, அவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
மோசமான வானிலை மற்றும் ஆழமான சரிவு காரணமாக மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்ட நிலையிலும், மீட்புக் குழுவினர் பள்ளத்தாக்கில் இறங்கி விபத்தில் பலியான 8 பேரின் உடல்களையும் மீட்டனர். உயிரிழந்தவர்களில் கார்த்திகேயன் (48), அவரது மனைவி மணிமாலா (42) மற்றும் அவர்களது 13 வயது மகன் நந்தன் ஆகிய மூவரும் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
இதில் பலியான மணிமாலாவின் சொந்த ஊர் திருப்பூர் செங்குந்தாபுரம் ஆகும்; கார்த்திகேயன் ஈரோட்டைச் சேர்ந்தவர். இந்த குடும்பத்தினர் கடந்த சில ஆண்டுகளாகக் கர்நாடக மாநிலம் பெங்களூரு ஒயிட்பீல்டு பகுதியில் வசித்து வந்தனர். கார்த்திகேயன் அங்குள்ள தனியார் பள்ளிகளுக்கு உணவு தயாரித்து வழங்கும் கேட்டரிங் தொழில் செய்து வந்தார்.
இவர்களது மகன் நந்தன் ஒரு சிறந்த டேக்வாண்டோ வீரர் ஆவார். இமாசல பிரதேசத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டியில் நந்தன் பங்கேற்பதற்காகத் தனது பெற்றோருடன் காரில் சென்றபோதுதான் இந்த கொடூர விபத்து நிகழ்ந்து, மூன்று பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
