கேரளாவில் தற்போது ஆண்களுக்கான பிரத்யேக ‘சிங்கிள் பீஸ்’ ஆடை வடிவம் ஒரு புதிய பேஷன் ட்ரெண்டாக உருவெடுத்து வருகிறது. ‘கைஷி பை யுவா’ என்ற பிராண்ட் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த ஆடையை, பெண்களின் நைட்டி ஆடைகளைப் போலத் தலையோடு எளிதாக மாட்டிக் கொள்ள முடியும் என்பதால், இது பரவலாக ஆண்களுக்கான நைட்டி ஆடை என அழைக்கப்படுகிறது.

கேரளாவின் பாரம்பரிய குர்தா மற்றும் முண்டு (வேட்டி) ஆகிய இரண்டையும் ஒருங்கிணைத்து ஒரே ஆடையாக இது தைக்கப்பட்டுள்ளது. இதனால் வேட்டி அவிழ்ந்து விழுந்துவிடுமோ என்ற பயம் தேவையில்லை என்பதால், வேட்டி கட்டத் தெரியாத ஆண்களும் இதை மிக எளிதாக அணிய முடியும்.

இந்த ஆடை 100 சதவிகிதம் பிரீமியம் காட்டன் துணியில், உயர்தர டிஜிட்டல் பிரிண்டுகளுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் வெளியே தெரியாதவாறு ஒரு ரகசிய பாக்கெட்  கொடுக்கப்பட்டுள்ளதால், ஆண்கள் தங்களின் பர்ஸ் மற்றும் மொபைல் போன்களைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள முடியும்.

ஆண்களின் உயரத்திற்கு ஏற்ப நான்கு விதமான அளவுகளில் கிடைக்கும் இந்த ஆடை, இதுவரை யாரும் பார்த்திராத ஒரு புதுமையான மற்றும் சுதந்திரமான அனுபவத்தை வழங்குவதால், கேரளா மட்டுமின்றி இணையவாசிகளின் கவனத்தையும் ஈர்த்து ஒரு புதிய பேஷன் புரட்சியாக மாறி வருகிறது.