உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில் உள்ள மாவட்ட கலெக்டரேட் அலுவலகத்திற்கு, ரேஷ்மா என்ற ஏழை விதவைத் தாய், மனவளர்ச்சி குன்றிய மற்றும் மாற்றுத்திறனாளியான தனது 14 வயது மகளைத் தூக்கிக்கொண்டு வந்து கண்ணீருடன் நீதி கேட்டுப் போராடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரேஷ்மாவின் மகளுக்குக் கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பு மாவட்ட அரசு மருத்துவமனையில் காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அப்போது மருத்துவமனை ஊழியர்கள் ₹25,000 லஞ்சம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

தன்னிடம் பணமில்லை என்று ரேஷ்மா மறுக்கவே, சிகிச்சை அளிக்க அவர்கள் மறுத்துள்ளனர். இதனால் மாவட்ட ஆட்சியரை (DM) நேரில் சந்தித்து ரேஷ்மா இலவச சிகிச்சைக்கான உத்தரவைப் பெற்ற போதிலும், மருத்துவமனை ஊழியர்கள் அவரிடம் இருந்து ஏமாற்றி ₹8,000 லஞ்சம் வாங்கியுள்ளனர்.​இதன்பின்னர், காலில் கட்டப்பட்டிருந்த கட்டை அவிழ்ப்பதற்காகச் சிறுமியை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அறுவை சிகிச்சை செய்த டாக்டர் சதுர்வேதி என்பவர், சிறுமியின் முட்டியைத் தாங்க முடியாத அளவுக்குக் கட்டாயப்படுத்தி மடக்கியுள்ளார்.

அப்போது சிறுமி வலியால் அலறியதுடன், காலில் இருந்து எலும்பு உடையும் சத்தமும் கேட்டுள்ளது. ஆனால், மருத்துவர்கள் அவர்களை அங்கிருந்து வலுக்கட்டாயமாகத் துரத்தியடித்துள்ளனர். பின்னர் தனியார் லேபில் எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தபோது சிறுமியின் கால் எலும்பு உடைந்து போயிருந்தது அம்பலமாகியுள்ளது.

இச்சம்பவம் குறித்து முசாபர்நகர் தலைமை மருத்துவ அதிகாரி (CMO) சுனில் தேவதியாவிடம் கேட்டபோது, இந்த விவகாரம் குறித்துத் தீவிர விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும், தவறு செய்த மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் மீது கடுமையான சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார். இச்சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் தற்போதைய ஹாட் டாபிக்காக மாறிப் பரவி வருகிறது.