செங்கல்பட்டு மாவட்டம் நரிக்குறவர் காலனி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தின் மதிப்பு தற்போது பல மடங்கு உயர்ந்துள்ள நிலையில், அந்த நிலத்தை எக்காரணம் கொண்டும் விற்பனை செய்ய வேண்டாம் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது சுமார் ரூ. 50 கோடி மதிப்புடைய அந்த நிலத்தை, இடைத்தரகர்கள் அல்லது பணக்காரர்களின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி விற்றுவிட்டால், எதிர்காலத்தில் உங்கள் சந்ததியினர் வீடற்றவர்களாக மாறும் அபாயம் இருப்பதாக அவர் எச்சரித்தார். அரசாங்கம் வழங்கிய இந்த வாழ்வாதாரத்தை முறையாகப் பயன்படுத்தி, அங்கேயே நிலையாகத் தங்கி முன்னேற வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.

மேலும் மக்களின் நலன் கருதி அமைச்சர் வழங்கிய இந்த அறிவுரை, சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. நிலத்தின் இன்றைய சந்தை மதிப்பை விட, எதிர்கால பாதுகாப்பே முக்கியம் என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாற வேண்டாம் என்று மக்களைக் கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில் நரிக்குறவர் இன மக்களின் கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காகப் பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வரும் நிலையில், கைவசமுள்ள நிலத்தை தற்காத்துக் கொள்வது அவர்களின் முன்னேற்றத்திற்கு மிக அவசியமானது என அவர் வலியுறுத்தினார்.