படித்து, கைநிறைய சம்பாதிக்கும் பெண்களுக்கும் திருமணத்திற்குப் பிறகு தங்களது சுயமரியாதை மற்றும் வேலையை விட்டுக்கொடுக்க வேண்டிய சூழல் இன்றும் நீடிக்கிறது என்பதற்குச் சான்றாக ஒரு ஐடி தம்பதியின் விவாகரத்து கதை சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

பள்ளிப் பருவத்திலிருந்தே காதலித்து, ஒரே நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்த ஒரு டெக்கி தம்பதி, திருமணத்திற்குப் பிறகு இரண்டு குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். கடின உழைப்பால் அந்தப் பெண் தனது கணவரை விட அதிக சம்பளம் வாங்கும் நிலைக்கு உயர்ந்தார்.

இந்நிலையில், கணவனின் தாய்க்கு உடல்நிலை சரியில்லாமல் போக, “நீ வேலையை விட்டுவிட்டு என் அம்மாவைக் கவனித்துக்கொள்” என்று கணவர் வற்புறுத்தியுள்ளார். அதற்கு அந்தப் பெண், “வேண்டுமானால் நான் குடும்பச் செலவுகளைப் பார்த்துக்கொள்கிறேன், நீ ஒரு பிரேக் எடுத்துக் கொள் அல்லது என் அம்மாவை உதவிக்கு அழைக்கலாம்” என்று கூறியுள்ளார்.

ஆனால், “பெண் தான் தியாகம் செய்ய வேண்டும்” என்ற பிடிவாதத்தில் கணவர் குடும்பத்தினர் அந்தப் பெண்ணை மனரீதியாகத் துன்புறுத்தியுள்ளனர்.

ஒருகட்டத்தில் பொறுமை இழந்த அந்தப் பெண் குழந்தைகளுடன் வெளியேற, தற்போது அந்தத் தம்பதி விவாகரத்து வரை சென்றுள்ளனர். “பெண் எவ்வளவு தான் உழைத்தாலும், அவளது வேலைக்கு மதிப்பில்லை” என இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டுப் பதிவிடப்பட்டுள்ள ட்வீட் இப்போது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.