தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு ‘சக்தி கேந்திரா’ என்கிற புதிய மற்றும் மிக முக்கியமான பொறுப்பு வழங்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் அண்ணாமலை மாநிலத் தலைவர் பதவியிலிருந்து மாற்றப்பட்டு, நயினார் நாகேந்திரன் தலைவராக நியமிக்கப்பட்ட நிலையில், அண்ணாமலையின் அடுத்த மூவ் என்னவாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு நிலவியது. இந்தச் சூழலில், சேத்துப்பட்டில் உள்ள ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட அண்ணாமலை, தனது தரப்பு நியாயங்களையும், எதிர்காலத் திட்டங்களையும் மிகத் தெளிவாக எடுத்துரைத்ததாகக் கூறப்படுகிறது.

​இதற்கிடையில், பாஜக தேசிய அமைப்புப் பொதுச்செயலாளர் பி.எல். சந்தோஷ் இன்று சென்னை கமலாலயத்தில் மூத்த தலைவர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். அண்ணாமலையைச் சமாதானப்படுத்துவது மற்றும் அவருக்கு வழங்கப்பட வேண்டிய அடுத்தகட்டப் பொறுப்புகள் குறித்து இந்த மீட்டிங்கில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது. ‘சக்தி கேந்திரா’ என்பது அடிமட்டத் தொண்டர்களை ஒருங்கிணைக்கும் ஒரு வலிமையான பொறுப்பு என்பதால், 2026 சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்தே அண்ணாமலைக்கு இந்த அசைன்மென்ட் கொடுக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் முணுமுணுக்கின்றன.