இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்கி நடைபெற்று வரும் 10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் ஒரு பகுதியாக, (பிப் 08‌) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆப்கானிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியைக் காண வந்த ரசிகர்கள் மைதானத்திற்குள் “விசில்” எடுத்துச் செல்ல போலீசாரால் தடை விதிக்கப்பட்ட சம்பவம் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

பொதுவாகத் தண்ணீர் பாட்டில், சிகரெட் போன்ற பொருட்களுக்குத் தடை இருக்கும் நிலையில், திடீரென விசிலுக்கும் தடை விதிக்கப்பட்டது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இது குறித்து விளக்கம் அளித்த தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம், இந்தத் தடைக்கும் தங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்றும், போலீசார் தரப்பிலிருந்து வந்த தகவலின் அடிப்படையிலேயே இது நடைமுறைப்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

மறுபுறம், இந்த விவகாரம் குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சி.இ.ஓ காசி விஸ்வநாதனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அது பற்றித் தற்போது பேச முடியாது என அவர் தவிர்த்துவிட்டார்.

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கட்சிக்குத் தேர்தல் சின்னமாக “விசில்” ஒதுக்கப்பட்டிருக்கும் நிலையில், மைதானத்திற்குள் விசிலுக்குத் தடை விதிக்கப்பட்டது அரசியலோடு தொடர்புபடுத்திப் பேசப்பட்டு வருகிறது. சமூக வலைதளங்களில் இது பேசுபொருளாகியுள்ள நிலையில், இந்தத் தடைக்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்த அதிகாரப்பூர்வமான தெளிவான விளக்கம் இன்னும் வெளியாகவில்லை.