செக் குடியரசில் நடைபெற்ற கலப்பு தற்காப்புக் கலை போட்டியின் போது, ஒரு வீரர் தனது எதிராளியின் காதைக் கடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘விதிமுறைகள் இல்லாத போட்டி’‌‌ என்ற பெயரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், பாவோல் வாஸ்கோ என்ற வீரர் தனது எதிராளியான வாக்லவ் மிகுலாசெக்கின் காதைக் கடித்துக் குதறினார்.

இதனால் காதில் இருந்து ரத்தம் வழிய, மிகுலாசெக் வலியால் துடித்தார். இதைப் பார்த்த நடுவர் உடனடியாகப் போட்டியை நிறுத்தினார். பின்னர் தனது காயத்தின் கோரமான புகைப்படங்களை மிகுலாசெக் சமூக வலைதளங்களில் பகிர்ந்து தன் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

வாஸ்கோவின் இந்த மனிதாபிமானமற்ற செயலால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் அவர் மீது தாக்குதல் நடத்தினர். அவர் மேடையை விட்டு வெளியேற முயன்றபோது, கூட்டத்தில் இருந்து நாற்காலிகள் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் அவர் மீது வீசப்பட்டன.

“>

 

பாதுகாப்புக் காவலர்கள் அவரை மீட்க முயன்றபோதும், சிலர் அவரைத் துரத்திச் சென்று சரமாரியாகத் தாக்கினர். ஒரு வீரர் அவரது வயிற்றில் எட்டி உதைக்க, நிலைமை மோசமானதால் வாஸ்கோ அங்கிருந்து அவசரமாக அப்புறப்படுத்தப்பட்டார். விளையாட்டுத் துறையில் இத்தகைய வன்முறைச் சம்பவம் உலகளவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.