தமிழ்நாட்டில் நேற்று நடைபெறவிருந்த குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ முதன்மை தேர்வுகள், தேர்வு மையங்களில் ஏற்பட்ட கடும் குளறுபடிகள் காரணமாக திடீரென ஒத்திவைக்கப்பட்டன.
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தேர்வு மையத்திற்கு வந்த பல தேர்வர்களின் பதிவு எண்கள் அங்கு இல்லாததால் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதே சமயம், நந்தனம் கல்லூரியில் நூற்றுக்கணக்கானோர் வரவேண்டிய இடத்தில் மிகக் குறைவானவர்களே வந்திருந்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த தேர்வர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர மாநிலம் முழுவதும் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்தது.
இந்த விவகாரத்தில் அரசு கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. தேர்வு மையக் குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்கும் வகையில், டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சண்முகசுந்தரம் அந்தப் பதவியில் இருந்து அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார்.
அவருக்குப் பதிலாக வெங்கடப்பிரியா ஐஏஎஸ் புதிய கட்டுப்பாட்டு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2ஏ முதன்மை தேர்வுகள் மீண்டும் எப்போது நடைபெறும் என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், வரும் 22-ஆம் தேதி நடைபெறவிருந்த குரூப் 2 பாடத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
