தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசியல் களம் அதிரடியான மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தங்களை அதிமுகவில் இணைத்துக்கொண்டனர். எடப்பாடி பழனிசாமியின் சொந்த மண்ணிலேயே மாற்று கட்சியினர் திரளாக வந்து இணைந்தது, கொங்கு மண்டல அரசியலில் அதிமுகவின் பலத்தை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் வகையில் அமைந்துள்ளது.

​இந்த இணைவு விழாவிற்குப் பிறகு பேசிய எடப்பாடி பழனிசாமி, “அதிமுகவின் மக்கள் நலத் திட்டங்களால் ஈர்க்கப்பட்டு, பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து எங்களுடன் இணைய விருப்பம் தெரிவித்து வருகின்றனர்” என மிகுந்த நம்பிக்கையுடன் தெரிவித்தார். தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் பல முக்கியப் புள்ளிகள் அதிமுகவில் இணைவார்கள் என்றும், இது வெற்றியின் தொடக்கம் என்றும் அதிமுகவினர் உற்சாகமாகப் பேசி வருகின்றனர். எதிர்க்கட்சிகளின் கூடாரத்திலிருந்து ஆட்களை இழுக்கும் எடப்பாடி பழனிசாமியின் இந்த ‘சேலம் ஸ்கெட்ச்’ அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.