சேலம் சீலநாயக்கன்பட்டியில் வரும் பிப்ரவரி 13-ம் தேதி நடைபெறவுள்ள தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு, சேலம் மாநகர போலீசார் பல்வேறு அதிரடி நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளனர். மதியம் 12 மணி முதல் 3 மணி வரை மட்டுமே இந்த நிகழ்ச்சி நடைபெற வேண்டும் என்றும், போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் நிர்வாகிகள் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, முதியவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன், கூட்டத்தில் பங்கேற்கும் 5,000 பேருக்குக் கண்டிப்பாகத் தனித்தனியாக டோக்கன் வழங்கப்பட வேண்டும் என்று போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.
பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, மொத்தம் 51 கடுமையான கட்டுப்பாடுகளை போலீசார் விதித்துள்ளனர். இந்தச் சந்திப்பு ‘கே.வி.பி கார்டன்’ பகுதியில் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், சிசிடிவி கேமராக்கள், 10 ஆம்புலன்ஸ்கள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய மருத்துவக் குழுவினர் எனப் பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தயார் நிலையில் வைத்திருக்கத் தவெக நிர்வாகிகளுக்குத் தலைமை அறிவுறுத்தியுள்ளது. 2025-ல் கரூரில் நடந்த கூட்ட நெரிசல் விபத்தைத் தொடர்ந்து, இனிவரும் சந்திப்புகளில் இதுபோன்ற கடுமையான விதிகள் பின்பற்றப்படும் எனத் தெரிகிறது.
