தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் இருந்து மகாத்மா காந்தியின் பெயரை மத்திய அரசு நீக்கியதைக் கண்டித்து, திருச்சியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரம்மாண்ட பாதயாத்திரை மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, “தமிழகத்தை வஞ்சிக்கும் மோடி அரசு, பட்ஜெட்டில் ஒரு பைசா கூட ஒதுக்கவில்லை; இப்போது தேசத்தந்தையின் பெயரையே நீக்கியுள்ளனர், நாளை ரூபாய் நோட்டில் உள்ள காந்தி படத்தையும் நீக்குவார்கள்” என ஆவேசமாக முழங்கினார். மேலும், 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வைத்தது போல், காந்தியின் பெயரை மீண்டும் வைக்கும் வரை ஓயமாட்டோம் எனச் சபதமேற்றார்.

​திமுக கூட்டணியில் ஆட்சியில் பங்கு மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “நாங்கள் என்ன பங்காளிகளா பங்கு தருவதற்கு?” எனச் சிரித்துக்கொண்டே பதிலளித்த அவர், திமுக தலைவருக்குப் பெரிய மனது இருப்பதாகவும், ஆட்சியில் பங்கு தரும் எண்ணம் அவருக்கு உள்ளதாகவும் சூசகமாகத் தெரிவித்தார். “மலைக்கோட்டை நகரில் இருந்து சென்னை புனித ஜார்ஜ் கோட்டையை காங்கிரஸ் பிடிப்பது உறுதி” என அதிரடி காட்டிய செல்வப்பெருந்தகை, பாஜக – அதிமுக கூட்டணியைத் தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள் என்றும் சாடினார்.