புனே நகரின் டங்கே சௌக் (Dange Chowk) பகுதி எப்போதுமே போக்குவரத்து நெரிசலுக்குப் பெயர் பெற்றது. ஆனால், சமீபத்தில் அங்குள்ள சாலையில் சென்ற ஒரு ஆட்டோ-ரிக்ஷா அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. வழக்கமாக ஆட்டோவிற்குள் பயணிகள் அமர்ந்திருப்பார்கள், ஆனால் இந்த ஆட்டோவின் கூரை மீது ஒரு நாய் மிகவும் நிதானமாகவும், நம்பிக்கையுடனும் அமர்ந்து பயணம் செய்த காட்சி பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஆட்டோ ஸ்பீடு பிரேக்கரில் ஏறி இறங்கினாலும் சரி, வளைவுகளில் திரும்பினாலும் சரி, அந்த நாய் சற்றும் பதற்றமடையாமல் ஒரு ராஜநடை போடும் கம்பீரத்தோடு கூரை மீது அமர்ந்து சாலையை வேடிக்கை பார்த்தபடி சென்றது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட சில நாட்களிலேயே சுமார் 17.7 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் அந்த நாயை “டோகேஷ் பாய்” (Dogesh Bhai) என்றும், “தெருக்களின் இளவரசன்” என்றும் செல்லமாக அழைத்து வருகின்றனர். அதே சமயம், ஆட்டோவின் மேல் பகுதியில் நாய் அமர்ந்து செல்வது அதன் உயிருக்கு ஆபத்து என்றும், வாகனம் திடீரென பிரேக் அடித்தால் நாய் கீழே விழுந்து காயமடைய வாய்ப்புள்ளதாகவும் சிலர் தங்களது கவலையைத் தெரிவித்துள்ளனர். எது எப்படியோ, இந்த “புனே டாக்” இப்போது இணையத்தில் செம ட்ரெண்டிங்!
