குஜராத் மாநிலம் வல்சாட் மாவட்டத்தில் உள்ள பர்தி என்ற பகுதியில் பார்ப்பவர் நெஞ்சை உறைய வைக்கும் ஒரு ‘ஹிட் அண்ட் ரன்’ விபத்து அரங்கேறியுள்ளது. அந்த ஊரில் வசிக்கும் ஹிதேஷ் படேல் என்பவர் கேபிள் நெட்வொர்க் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று அவர் தனது காரை ஓரமாக நிறுத்திவிட்டு, சாலையைக் கடக்க முயன்றபோது எதிரே மின்னல் வேகத்தில் வந்த ஒரு சொகுசு கார் அவர் மீது மிகக் கொடூரமாக மோதியது.

இந்த மோதலின் வேகம் எந்தளவுக்கு இருந்தது என்றால், ஹிதேஷ் அந்த காரின் போனட் மீது தூக்கி வீசப்பட்டு, பின்னர் காற்றில் பந்து போலச் சுழன்று சாலையில் விழுந்துள்ளார். ஒரு விநாடி கூட காரை நிறுத்தாத அந்த டிரைவர், மனிதாபிமானமே இல்லாமல் மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான இந்த காட்சிகள் காண்போரை நிலைகுலையச் செய்கிறது.

சாலையில் அடிபட்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த ஹிதேஷை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள பர்தி போலீசார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தப்பியோடிய கார் டிரைவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

கார் வந்த வேகத்தைப் பார்த்தால் டிரைவர் மது போதையில் இருந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. சாலையில் நடந்து சென்ற நபரின் மீது எந்தத் தவறும் இல்லாத நிலையில், ஒரு உயிரைப் பற்றி துளியும் கவலைப்படாமல் கார் டிரைவர் தப்பிச் சென்றது அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.