குஜராத் மாநிலம் வல்சாட் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 48-க்கு அருகே, நேற்று எதிர்பாராத விதமாக லாரியில் இருந்த கன்டெய்னர் சரிந்து விழுந்ததில் தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். பார்லி பகுதியில் அதிவேகமாகச் சென்ற லாரி, சாலையோரம் இருந்த தற்காலிகக் கட்டுமானக் கொட்டகையின் மீது மோதியுள்ளது.

அந்தச் சமயத்தில் தொழிலாளர்கள் உள்ளே அமர்ந்து உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். கன்டெய்னர் சரிவதைப் பார்த்த மற்ற தொழிலாளர்கள் பதறியடித்துக்கொண்டு ஓடித் தப்பித்த நிலையில், ஒரு நபர் மட்டும் உள்ளே சிக்கிக் கொண்டதால் கன்டெய்னர் அடியில் நசுங்கி உயிரிழந்தார்.

இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பார்ப்பவர்களை உறைய வைத்துள்ளன.

அதில் லாரி நிலைதடுமாறி சாலையை விட்டு வெளியேறுவதும், அடுத்த சில நொடிகளில் அதன் மீதிருந்த கன்டெய்னர் அருகில் இருந்த கட்டிடத்தைத் தொட்டுச் செல்லும் தூரத்தில் விழுவதும் பதிவாகியுள்ளது. இந்த விபத்தால் அந்தப் பகுதியில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

“>

 

இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், லாரி ஓட்டுநரின் கவனக்குறைவு தான் விபத்துக்குக் காரணமா என்பது குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.