பெங்களூரு சம்பிகேஹள்ளி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், திருடச் சென்ற இடத்தில் பொதுமக்கள் தாக்கியதால் ஆத்திரமடைந்த திருடன் ஒருவன், தானாகவே காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்த வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது. அஸ்கர் கான் என்ற ஆட்டோ ஓட்டுநர், தனது வருமானம் போதுமானதாக இல்லை எனக் கருதி நண்பர்களுடன் சேர்ந்து முதல்முறையாகத் திருட முடிவெடுத்துள்ளார்.

சிக்கனஹள்ளி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இரும்புப் பொருட்களைத் திருடச் சென்றபோது, அங்கிருந்த தம்பதியினர் இவர்களைப் பார்த்துக் கூச்சலிட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அஸ்கர் அவர்களைத் தாக்க முயல, சத்தம் கேட்டுப் பொதுமக்களும் அங்கு திரண்டுள்ளனர். நிலைமை மோசமானதைக் கண்ட அஸ்கரின் நண்பர்கள், அவரது ஆட்டோவிலேயே அவரைத் தனியாக விட்டுவிட்டுத் தப்பிச் சென்றனர். பொதுமக்களிடம் சிக்கிய அஸ்கருக்குத் தர்ம அடி விழுந்ததில், அவரது மண்டை உடைந்து பலத்த காயமடைந்தார்.

அங்கிருந்து எப்படியோ தப்பித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்ட அஸ்கர், நேராகக் காவல் நிலையத்திற்குச் சென்று தன்னைத் தாக்கிய பொதுமக்கள் மீதும், தன்னைத் தவிக்கவிட்டுச் சென்ற நண்பர்கள் மீதும் புகார் அளித்தார். திருடச் சென்றதை ஒப்புக்கொண்டு, தன்னைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய திருடனின் இந்தப் புகாரைக் கேட்டு காவல்துறையினரே ஒரு நிமிடம் ஸ்தம்பித்துப் போயினர். தற்போது இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தப்பிச் சென்ற நண்பர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.