நாடாளுமன்ற மக்களவையில் பிரதமர் மோடி உரையாற்ற இருந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக அவை ஒத்திவைக்கப்பட்டது. இது குறித்துப் பேசிய சபாநாயகர் ஓம் பிர்லா, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆளுங்கட்சி அமைச்சர்களின் மேஜை அருகே சென்று ஆர்ப்பாட்டம் செய்ததாகவும், அவர்கள் பிரதமர் மோடியைத் தாக்கச் சதித் திட்டம் தீட்டியதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
அசம்பாவிதங்களைத் தவிர்க்கவே தான் பிரதமரை அவைக்கு வர வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதாகக் கூறிய அவர், சபை நாகரிகம் காக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார். ஆனால், சபாநாயகரின் இந்தக் குற்றச்சாட்டை காங்கிரஸ் எம்.பி-க்கள் முற்றிலுமாக மறுத்து இது ஒரு அபத்தமான புகார் என்று விமர்சித்துள்ளனர்.
இந்தக் களேபரங்களுக்கு மத்தியில் மாநிலங்களவையில் உரையாற்றிய பிரதமர் மோடி, கடந்த 25 ஆண்டுகளாக எதிர்க்கட்சிகள் தன்னைத் தொடர்ந்து விமர்சித்து வருவதாகக் கூறினார்.
பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை அழித்தது மற்றும் 370-வது சட்டப்பிரிவை நீக்கியது போன்ற நடவடிக்கைகளால் ஆத்திரமடைந்துள்ள எதிர்க்கட்சிகள், தனக்குச் சவக்குழி தோண்டப் பார்ப்பதாக ஆவேசமாகத் தெரிவித்தார்.
பிரதமர் பதவி என்பது ஒரு குடும்பத்தின் சொத்து அல்ல என்று குறிப்பிட்ட அவர், காந்தி குடும்பத்தினர் பல வாய்ப்புகள் கிடைத்தும் ஏழ்மையை ஒழிக்கத் தவறிவிட்டனர் என்றும், அவர்கள் தன் மீது வெறுப்பைக் கக்குவதாகவும் குற்றம் சாட்டினார்.
